Monday, September 8, 2008

தமிழ் எழுத்துக்களின் பரிணாம வளர்ச்சி


தென்னிந்திய வரலாற்றிலேயே மிக உயர்ந்த இடம் பெற்றிருந்த ஆட்சி சோழ பேரரசின் ஆட்சிதான். அதுவும் முதலாம் இராஜ ராஜன் காலத்திலும், முதலாம் இராஜேந்திர சோழன் காலத்திலும் தென்னிந்தியாவில் மட்டுமின்றி வட இந்தியாவிலும், இலங்கையிலும், பர்மாவிலும், கடாரத்திலும்(Malaysia) மற்றும் பல தெற்காசிய நாடுகளிலும் புகழ்பெற்றிருந்ததோடல்லாமல் அந்த பகுதியை எல்லாம் தன் ஆட்சி குடைக்குள் வைத்திருந்தார்கள்.
இராஜ ராஜ சோழனின் அருமை பெருமைகளை கல்கியின் பொன்னியின் செல்வனில் காணலாம். இராஜ ராஜ சோழனின் ஆட்சியில் தனது ஆதிக்கத்தின் எல்லையை வடநாட்டிலும், கடல் கடந்தும் விரிவுபடுத்தியதோடல்லாமல் ஆட்சி முறைகளையும், பல்வேறு சட்ட திட்டங்களையும், வரிகளையும் உருவாக்கியும் முறைபடுத்தியும் இருக்கிறார். இவர் காலத்திலும் முதலாம் இராஜேந்திரன் காலத்திலும் கப்பற்படையும் அயல் நாட்டு வாணிகமும் சிறந்து விளங்கியது. திருக்கோவில்களின் எண்ணிக்கை பல்கிபெருகியது, தட்சின மேரு, இராஜ ராஜீச்சுவரம் என்றழைக்கப்படும் தஞ்சை பெரிய கோவில் முதல் பலநூற்றுகணக்கான கோவில்கள் கட்டப்பட்டன பல கோவில்கள் புதுப்பொலிவு பெற்றன, இந்த கோவில்களுக்கெல்லாம் ஏராளமான நிலங்களும் பொருட்களும் மானியமாக வழங்கப்பட்டன. அவ்வாறு வழங்கப்பட்ட சொத்துக்களின் விபரங்கள் கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பதியப்பட்டிருக்கிறது.
மேலும் மற்ற சேர, பாண்டியர்களை விட அதிகமாக வரலாற்று ஆவணங்களை உருவாக்கிய பெருமைக்குரியவர்கள் சோழர்கள் தான், அவர்கள் ஆட்சி புரிந்த இடமெல்லாம் கல்வெட்டுகளும், செப்பேடுகளும் மற்றும் பல ஆவணங்களும் கிடைத்தவண்ணம் உள்ளதே இதற்கு சான்று. இந்த வரலாற்று சின்னங்களில் ஒரு சில தஞ்சாவூர் அருங்காட்சியகத்தில் உள்ளது, அவற்றில் பலவற்றை இங்கே நிழல் படமாக காணலாம். இந்த அருங்காட்சியகம் (Museum) தஞ்சாவூர் – திருச்சிராப்பள்ளி சாலையில் உள்ள மணிமண்டபத்தில் தொல்பொருள் ஆராய்ச்சி மையத்தால் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கல்வெட்டுகளை பற்றிய செய்திகளையும், சோழர்களை பற்றிய தகவல்களையும் அறிந்துகொள்ள ஆவல் கொண்டிருப்பீர்களெனில் நீங்கள் www.varalaaru.com இணைய இதழிலும்,
www.ponniyinselvan.in இணைய குழும தளத்திலும் தெரிந்துகொள்ளலாம்.
இதோ கண்களுக்கும் உள்ளத்திற்கும் விருந்து…

முதலில் வருவது தமிழ் எழுத்துக்களின் பரிணாம வளர்ச்சி, தமிழ் எழுத்துக்கள்.











இராஜராஜ சோழனின் 32 பெயர்கள் மற்றும் அவரது மனைவிகளின் பெயர்கள், இதில் ஏன் இருவரின் பெயரில் மட்டும் மாதேவி இல்லை, மேலும் இராசராசன் என்ற பெயர் 19 ஆம் இடத்தில்தான் வருகிறது



அடேயப்பா 38 தொழில் வரிகள் அந்த காலத்திலேயே இருந்திருக்கிறதெனில் இன்று நாம் திரு. சிதம்பரத்தை குறை கூறி என்ன பயன்!

மொத்தம் 17 வரிகள் பல்லவர் காலத்தில் இருந்ததாக படித்திருக்கிறேன் ஆனால் சோழர் காலத்திலோ 33 வகையான வரிகள் இருந்திருகின்றது.



ஆட்சி முறை அமைப்பை பார்த்தால் மிகவும் எளிமையாகத்தான் தெரிகிறது ஆனால் இந்த முறை ஆட்சியில் நடந்திருக்கும் நன்மைகளும் நன்றாக இருந்திருப்பதாகவே தெரிகிறது.

இங்கு கீழ் வரும் அரசு அதிகாரிகளின் பணிகளும் அவர்தம் பங்களிப்பும் தெரிந்தால் இன்றைய அதிகாரிகளுக்கு உதவியாக இருக்குமல்லவா!

அட இதென்ன நானாழி நெல் ஊதியமா, நாழி என்றால் இரண்டு உரி அதாவாது நான்கு உழக்கு, அப்படியெனில் நாளொன்றுக்கு ஒரு படி நெல் ஆனால் இது எந்த வகையான ஊழியருக்கு கொடுக்கப்பட்டது என்று தெரியவில்லை.


வாமனருக்கு பின் நிலத்தை அளந்தது நம் இராஜராஜராகத்தான் இருக்கக்கூடும் இவருடைய ஆறாம் ஆட்சிக்காலத்தில். மேலும் சிற்ப அளவில் உள்ள அனு என்பது என்ன, இன்றைய அணுவை பற்றிய அறிவு அன்றைக்கே இருந்ததா அல்லது இது வேறு அனுவா என்று ஆராய வேண்டும்.

கோல்களில் 2-ம் கடிகை களத்துக்கோல் மற்றும் திருப்பாதக்கோல் போன்று பல வகைகள் இருந்ததாக கருதப்படுகிறது. மேலும் ஒரு கோல் என்பது 16 சாண்கள்,
18 கோல்கள் - 1 குழி
10 குழிகள் - 1 மா
240 குழிகள் - 1 பாடகம்
20 மா - 1 வேலி

கீழிருக்கும் இந்த பிரிவுகளில் இலங்கை மற்றும் கடாரம் போன்ற நாடுகள் இல்லையே, இவை இராஜராஜனின் நேரடி ஆட்சியின் கீழ் வரவில்லையோ, ஒருவேளை அவர்கள் கப்பம் கட்டும் சிற்றரசர்களாக இருந்திருக்கலாம்.

இன்றும் இது போல் கோயில் தணிக்கைகள் நடந்தால் நன்றாக இருக்கும், பல கோயில் நிலங்கள் கொள்ளை போகாமல் இருந்திருக்கும், அர்ச்சகர்களும் தீபம் காட்ட காசு கேட்கும் நிலை வந்திருக்காது.



சோழ மண்டலத்தின் வளத்திற்கு காரணம் அங்கு இருந்த காவிரி ஆறும் மற்ற ஆறுகளுமே. சோழர் காலத்தில் பல ஆறுகள் வெட்டப்பட்டன, அவைகளுக்கு அந்த மன்னர்களின் பெயர்களே சூட்டப்பட்டன.
முதற்பராந்தக சோழனை வீரசோழன், மதுராந்தகன் என்று சிறப்பு பெயர் சொல்லி அழைத்தனர், அவரது பெயரால் தஞ்சைக்கு வடக்கே வீரசோழ வடவாறும் திருப்பனந்தாளுக்கு வடக்கே மதுராந்தக வடவாறும் இருந்ததாக கல்வெட்டு செய்திகள் கூறுகின்றன. முதல் இராஜராஜனால் உய்யகொண்டான், சீர்த்திமான் ஆகிய ஆறுகளும், முதலாம் இராஜேந்திர சோழனால் முடிகொண்டான் ஆறும், வீர ராஜேந்திர சோழனால் வீரசோழன் ஆறும், விக்கிரம சோழனால் விக்கிரமனாறும் வெட்டப்பட்டன.

13 தெருக்கள்தான் இருந்திருக்குமா?!


அடக்கடவுளே இதென்ன கொடுமை? தன்னுடைய போர்வீரர்கள் சண்டையிட்டு மாள்வதை மன்னர் பார்த்துக்கொண்டிருப்பதா...

வட இந்தியாவில் பெரிய பெரிய அரசுகள் இருந்ததாக நம்முடைய பள்ளி வரலாற்று நூல்களில் படித்துள்ளோம் ஆனால் அவர்களால் சாதிக்கமுடியாததையெல்லாம் நம்முடைய சோழர்கள் தங்களுடைய கடற்படையினால் சாதித்தார்கள். இலங்கை, கடாரம், தென்மேற்கு தீவுகள் ஆகியவற்றை கைப்பற்றி தங்கள் ஆட்சியை கடல்தாண்டியும்நிலைநாட்டினார்கள். இதோ சேந்தன் திவாகரம் எனும் நூலில் குறிப்பிடப்பட்ட கப்பல் பெயர்கள்


சோழர்கள் காலத்தில் அவ்வையார், சேக்கிழார், கம்பர், ஒட்டக்கூத்தர், புகழேந்தி, கச்சியப்ப சிவாச்சாரியார் போன்ற புலவர்கள் பெரிதும் ஆதரிக்கப்பட்டார்கள். மேலும் பல்வேறு கல்வெட்டுகளில் இருந்து பாடசாலைகளுக்கு கொடுக்கப்பட்ட மானியம், ஆசிரியர்களுக்கு கொடுக்கப்பட்ட ஊதியம், பயிற்ற்விக்கப்பட்ட பாடங்கள், பாட சாலைகள், கல்லூரிகள் பற்றின தகவல்கள் அறியப்படுகின்றன. இதோ சோழர் காலத்தில் இருந்த இலக்கியங்களின் பட்டியல்

No comments: